பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 28, 2009


பாகிஸ்தான் நகரான பெசாவாரில் இடம்பெற்ற வாகனக் குண்டுத் தாக்கதலில் பலர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.


பாகிஸ்தானின் பிரதான நகர்களில் ஒன்றான பெசாவாரின் தென்மேற்கு பகுதியில் உள்ள சந்தை தொகுதி ஒன்றில் இவ் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் பெண்கள் பல்பொருள் அங்காடி ஒன்று பாரிய வாகனக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் பாகிஸ்தான் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் குறைந்தது 80 பேர் வரையில் கொல்லப்பட்டு இன்னும் 200 வரையானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் வந்த செய்திகளின் படி 91 பேர் உயிரிழந்துள்ளதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.


பெசாவர் நகரின் அமைவிடம்

இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகைளை மேற்கொண்டு வரும் இந்த சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இலரி கிளின்டன் பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொண்டு அங்கு தங்கியுள்ள நிலையிலும் இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அங்கு பெரும் அச்சம் நிலவுவதாகவும் நோயாளர் காவு ஊர்திகள் காயமடைந்தவர்களை அப்புறப்படுத்துவதில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள செய்தி ஊடகங்கள் உடனடியாக தாக்குதலுக்கு யார் காரணம் என்பது புலப்படவில்லை என்றும் எவரும் உரிமை கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளன.


முன்னர் பாகிஸ்தான் தமக்கு எதிராக நடாத்தும் தாக்குதலுக்கு பெரும் விலைகொடுக்க வேண்டி வரும் என தலிபான்கள் எச்சரித்து இருந்தமையும் அதை தொடந்து வரிகிஸ்தானில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்