பாகிஸ்தான் பாடகர் ராகத்பதக் அலிகான் கைதுக்குப் பின் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 15, 2011

பாக்கித்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ராகத்பதக் அலிகான் புது தில்லியில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரால், தன் குழுவினருடன் இந்தியா வழியாகத் துபாய் செல்கையில் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.


ராகத் பாடக் அலி கான்

37 வயதான ராகத்பதக் அலிகான் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 1 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பணம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.56 லட்சத்திற்கும் மேல்), மற்றும் காசோலைகள், கேட்பு வரைவோலைகள் ஆகியன வைத்து இருந்ததாகப் புது தில்லி பன்னாட்டு வானூர்தி முனையத்தில் தனது சகாக்கள் சித்திரேஷ் ஸ்ரீ வஸ்தாவா மற்றும் மறூப் ஆகியோருடன் கைது செய்யப்பட்டுப் பின்னர் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் வரும் 17 -ம் தேதி மீண்டும் விசாரணைக்குத் தம் முன் தோன்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். கணக்கில் காட்டப்படாத தொகையை அவர் வைத்திருந்தது குறித்துச் சரியான விவரங்களைத் தெரிவிக்காததால் இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாடகர் ராகத்பதக் அலிகான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் இசை நிகழ்ச்சியை நடத்துவதாகப் பணம் பெற்றுப் பின்னர் வராமல் ஏமாற்றி விட்டதாக ஏற்கனவே புகார் நிலுவையில் இருப்பதும், அவர் பாக்கித்தானில் இருந்ததால் அவர் மீது எந்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இவரை விடுவிக்க பாக்கித்தான் வெளியுறவுச் செயலர் பாக்கித்தான் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்து வந்தார். பாகிசுதான், இவரைத் தகுந்த மதிப்புடன் நடத்துவதோடு விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டது. இத்துடன் இவருடைய கைது குறித்த விவகாரத்தை உன்னிப்பாக பாக்கித்தான் கவனித்து வருகிறது.


மூலம்[தொகு]