பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ முழுமையான அங்கீகாரம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 2, 2011

பாலத்தீனத்தை நிரந்தர உறுப்புரிமை நாடாக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாசார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ நேற்றுத் திங்கட்கிழமை தீர்மானித்துள்ளது.


இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு 107 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் இந்த அமைப்பில் 173 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.


யுனெஸ்கோவின் இத்தீர்மானத்தை அமெரிக்காவும் இசுரேலும் கடுமையாக எதிர்த்துள்ளன. அமெரிக்கா நவம்பர் மாதம் யுனெஸ்கோவிற்கு வழங்க வேண்டிய 60 மில்லியன் டொலர் தொகையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவிற்கு ஆண்டு தோறும் கிடைக்கும் நிதியில் அமெரிக்கா 20 விழுக்காடுகள் வரை தரும் நாடாக உள்ளது.


மத்தியகிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் வாய்ப்புகளை இது பாதிக்கும் என்று இஸ்ரேல் தனது எதிர்ப்பு கருத்தை வெளியிட்டுள்ளது. மேலும் சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்லும் முயற்சிக்கு எதிராக இருக்கும் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். யுனெஸ்கோவின் இந்த முடிவை அடுத்து மேற்குக் கரையிலும் கிழக்கு எருசலேமிலும் தமது குடியேற்றத் திட்டங்களை அதிகரிக்கவிருப்பதாக இசுரேல் இன்று அறிவித்துள்ளது. 2,000 வீடுகள் உடனடியாக அமைப்பதற்கு அது திட்டமிட்டுள்ளது. அத்துடன் பாலத்தீன அதிகாரசபைக்கு நிதிகள் வழங்குவதையும் தற்காலிகமாக அது முடக்கியுள்ளது.


பாலத்தீனியர்களுக்கும் இசுரேலுக்கும் இடையே அமைதிப் பேச்சுகள் முறிவடைந்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இசுரேலியக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்துமாறு பாலத்தீனம் நிர்ப்பந்தித்து வருகிறது. இசுரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏறத்தாழ 500,000 யூதர்கள் இதுவரையில் குடியேற்றப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]