புருணையில் கடுமையான இசுலாமியச் சட்டம் கொண்டு வரப்படுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 30, 2014

புருணையில் கடுமையான இசுலாமியத் தண்டனைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் தலைவர் அறிவித்துள்ளார்.


தமது அயல் இசுலாமிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா ஆகியவற்றை விடக் கடுமையான இசுலாமிய சட்டத்தை புருணை ஏற்கனவே கொண்டுள்ளது. மது விற்கப்படுவதோ அல்லது அருந்துவதோ அங்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. புதிய இசுலாமியச் சரியா சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.


"நாளை 2014 மே 1 முதல் சரியா சட்டத்தின் முதல் கட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன் பின்னர் அடுத்தடுத்த கட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்," என சுல்தான் செய்தியாளர்களிடம் கூறினார்.


தண்டனைச் சட்டம் அடுத்த மூன்று ஆண்டு காலத்துக்குள் முழுமையாக அமுல் படுத்தப்படவிருக்கிறது. முதல் கட்டத்தில் தண்டம், மற்றும் சிறைத்தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படும், இரண்டாம் கட்டத்தில், உறுப்புகள் வெட்டுதல் போன்ற தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படும். திருமணத்துக்குப் புறம்பான உறவுகள், மற்றும் தன்னினச் சேர்க்கை போன்றவற்றுக்கு கல்லெறிந்து கொல்லுதல் போன்ற கடுமையான சட்டங்கள் மூன்றாம் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். இசுலாமியர் அல்லாதோருக்கும் இச்சட்டங்கள் பொருந்தும்.


போர்னியோ தீவில் உள்ள சிறிய நாடான புருணை சுல்தான் அசனால் போல்கையா என்பவரால் ஆளப்பட்டு வருகிறது. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்குள்ள பெரும்பான்மையானோர் மலாய் முஸ்லிம்கள் ஆவர். ஆனாலும் பௌத்தர்களும், கிறித்தவர்களும் இங்கு குறிப்பிட்டளவு வாழ்கின்றனர்.


மூலம்[தொகு]