பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு
- 10 சூலை 2014: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு
- 3 சூலை 2014: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு
- 24 ஏப்பிரல் 2014: பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது
- 28 சூலை 2013: பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு
- 7 சனவரி 2013: மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு
சனி, சூன் 30, 2012
பாலத்தீனத்தின் பெத்லகேம் நகரில் உள்ள பிறப்பிடத் தேவாலயம், மற்றும் அதனை அடையும் குறுகிய பாதை ஆகியவற்றை உலகப் பாரம்பரியக் களமாக ஐக்கிய நாடுகளின் கலாசாரப் பிரிவான யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இயேசு கிறித்து பிறந்த இடமாகக் கருதப்படும் தளத்தில் உள்ள குகையின் மேல் கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தமைக்கு பாலத்தீனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இக்கோரிக்கை அரசியல் நோக்கமுடையது எனக்கூறி அமெரிக்காவும் இசுரேலும் எதிர்த்து வாக்களித்தன.
கடந்த ஆண்டு பாலத்தீனம் யுனெஸ்கோவில் உறுப்புரிமை பெற்றதன் பின்னர் அந்நாட்டின் வேண்டுகோள் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
கிபி 399 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இக்கோவில் தீயில் அழிந்ததை அடுத்து 6ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது. இது கிறித்தவர்களின் புனித இடமாக உள்ளது. யெருசலேமில் இருந்து பெத்லகேம் வரையான பயணப்பாதையில் ஒரு சிறிய பகுதியூடாக மேரியும் யோசப்பும் கிறித்துமசு நாட்களில் ஊர்வலமாகச் செல்வர் என்று கூறப்படுகிறது.
ஆண்டு தோறும் இரண்டு மில்லியன் மக்கள் வரை இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று தரிசித்து வருகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை உருசியாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற யுனெஸ்கோ கூட்டத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 13 பேர் ஆதரவாகவும் 6 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் இந்த இரண்டு இடங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பும், நிதியுதவியும் கிடைக்கும்.
மூலம்
[தொகு]- Bethlehem sites given Unesco World Heritage status, பிபிசி, சூன் 29, 2012
- UNESCO names Church of Nativity as first Palestinian World Heritage site, ஹாரெட்சு, சூன் 29, 2012