உள்ளடக்கத்துக்குச் செல்

பேரண்டம் விரிவடைந்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 21, 2010


பேரண்டத்தில் உள்ள கரும் பொருட்களை ஆராய்ந்த போது பேரண்டம் எப்போதுமே விரிவடைந்து கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் அண்டம் ஒரு குளிர் நிறைந்த அண்டக் கழிவுப் பொருட்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஏபெல் 1689 விண்மீன் திரள் கொத்து

கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் புரொப்பல்சன் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த பேரா. எரிக் ஜூலோ தலைமையிலான அறிவியலாளரக்ள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் ஆய்வுக் கட்டுரை ’சயன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


தூர விண்மீன்களில் இருந்து வரும் ஒளி எவ்வாறு ஏபல் 1689 என்றழைக்கப்படும் விண்மீன் திரள் கொத்து (galactic cluster) ஒன்றினால் திரிவடைகிறது என்பதை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து அதன் மூலம் அண்டத்தில் (cosmos) உள்ள கரிய ஆற்றலின் அளவை வானியலாளர்கள் கண்டறிந்தார்கள்.


கரிய ஆற்றல் (dark energy) என்பது பேரண்டத்தை விரிவடையச் செய்ய உதவும் ஒரு புதிரான விசை ஆகும். இக்கரிய ஆற்றல் எவ்வாறு பேரண்டத்தில் பகுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்ததில், பேரண்டம் விரிவடைகிறது எனத் தெரிய வந்தது. இது படிப்படியாக குளிர்மையடைந்து கடைசியில் ஒரு கழிவுநிலமாக மாறலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அப்போது அதன் வெப்பநிலை "தனித்த சுழியம்” ஆக இருக்கும்.


பேரண்டத்தின் முக்கால் வாசிப் பகுதியை இந்தக் கரிய ஆற்றல் மூடிக்கொண்டுள்ளது. ஆனால் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்பது மட்டும் எமக்குத் தெரியும், ஏனெனில் அது பேரண்டத்தை விரிவடையச் செய்கிறது என அவர்கள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


ஏபெல் 1689 என்பது வேர்கோ என்ற விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு விண்மீன் திரள் கொத்து ஆகும். இதுவே இதுவரையில் கண்டுபிடிகக்ப்பட்ட இவ்வகைக் கொத்துகளில் மிகப் பெரியதாகும். இதன் பெரும் கனம் காரணமாக இது ஒரு உருப்பெருக்கும் கண்ணாடியாகத் தொழிற்பட்டு, ஒளி அதில் பட்டு வளைகிறது.

மூலம்

[தொகு]