உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் மாளிகையை போராளிகள் கைப்பற்றினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

ஞாயிறு, மார்ச்சு 24, 2013

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் மாளிகையை போராளிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே தலைநகரை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றிரவு ஓய்ந்திருந்த சண்டையை அடுத்து செலேக்கா போராளிகள் குழு தலைநகர் பாங்குயியை ஊடுருவினர். பொசீசே அயல் நாடான கொங்கோ சனநாயகக் குடியரசுக்கு இன்று ஞாயிறு காலை தப்பிச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த சனவரியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டை பொசீசே மீறிவிட்டதாகப் போராளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


தலைநகரில் உள்ள போராளிகளின் தளபதி கேணல் ஜூமா நார்க்காயோ, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "சனாதிபதி மாளிகையை நாம் கைப்பற்றி விட்டோம், ஆனால் பொசீசே அங்கு இருக்கவில்லை," என்றார். பாங்குயியில் உள்ள தேசிய வானொலிக் கட்டடத்தை நோக்கி நாம் செல்லவிருக்கிறோம். எமது தலைவர் மைக்கேல் ஜொத்தோடியா அங்கு உரையாற்றவிருக்கிறார், என அவர் மேலும் தெரிவித்தார்.


"போராளிகள் நகரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்," அரசுத்தலைவர் மாளிகையின் பேச்சாளர் காஸ்டன் மெக்குசாங்பா தெரிவித்துள்ளார்.


போராளிகளின் இத்திடீர் முன்னேற்றத்தை அடுத்து பிரான்சு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாட்டின் விமான நிலையத்தைப் போராளிகள் கைப்பற்றாமல் இருக்க அங்கு தனது படையினரையும் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள பிரெஞ்சுக் குடிமக்களை தமது வீடுகளினுள் இருக்குமாறு பிரான்சு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 1,200 பிரான்சியப் படையினர் நிலை கொண்டுள்ளனர்.


2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பிரான்சுவா பொசீசே ஆட்சியைக் கைப்பற்றினார்.


4.5 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1960 ஆம் ஆண்டில் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்த காலம் தொடக்கம், பல முறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளானது.


மூலம்

[தொகு]