மர்ம மனிதன் விவகாரம்: புத்தளத்தில் பொதுமக்களுடனான மோதலில் காவல்துறையினர் ஒருவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன:

திங்கள், ஆகத்து 22, 2011

இலங்கையில் புத்தளம் மணல்குன்று கிராமத்தில் நேற்றிரவு கிரீஸ் பூதம் என்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாக பரவிய பீதியை அடுத்து காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், காவல் துறையினரின் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒரு பெண், 13 வயது சிறுமி உட்பட ஐவர் காயமான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து புத்தளம் நகர பிரதான சுற்றுவலயத்தில் காவல்துறையினருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் இனம் தெரியாதோரால் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், ரயர்களும் வீதியில் போட்டு எரிக்கப்பட்டதால் போக்குவரத்து தடங்கல்கள் சில மணிநேரம் காணப்பட்டது.


மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் நாட்டின் நாலா பக்கங்களிலும் இடம்பெற்று வருவதாக இலங்கை ஊடகங்களில் நாள்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில சமூகவிரோதிகளும் திருடர்களும் பெண் பித்தர்களுமே இவ்விதம் பதற்ற நிலையை நாடெங்கிலும் ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் கூறிவருகின்ற போதிலும்கூட நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து மக்கள் குறைப்பட்டு வருகின்றனர்.


குறிப்பாக மர்ம மனிதன் நடமாட்டமும் அசம்பாவிதங்களும் இலங்கையின் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை வாழும் பிரதேசங்களிலே அதிகமாக நடைபெற்றுவருவது குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் நிலவிவருகின்றன. கடந்த சில வாரங்களாக கிராமப் புறங்களில் காணப்பட்டுவந்த க்ரீஸ் மனிதன் பீதி நேற்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் சிறுபான்மையினர் வாழும் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


கொழும்பு, புதுக்கடை பகுதிக்குள் மர்மமனிதர்கள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலால் இப்பகுதியில் நேற்றுக்காலை பெரும் பரபரப்பும் பதற்றமும் எற்பட்டது. மர்மமனிதர்கள் இருவரை தாம் கண்டதாக சிலர் தெரிவித்ததையடுத்தே இந்த நிலை இங்கு ஏற்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]