மலேசிய விமானத்தின் பகுதிகள் என நம்பப்படும் பொருட்களை ஆத்திரேலிய செய்மதிகள் கண்டறிந்தன

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 20, 2014

ஆத்திரேலியாவின் செயற்கைக் கோள்கள் கண்டுபிடித்த இரு பொருட்கள் இரு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சு விமானத்தின் பகுதிகளாக இருக்கலாம் என ஆத்திரேலியா கூறியுள்ளது.


ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் இன்று ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். செய்மதி மூலம் அவதானிக்கப்பட்ட இரு பகுதிகளின் மிகப் பெரியது கிட்டத்தட்ட 24 மீ நீளமானது எனக் கூறப்படுகிறது. ஆனாலும், இவை மறைந்த விமானத்தினுடையது தானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.


ஆத்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து தென்-மேற்கே 2,500 கிமீ தொலைவில் உள்ள தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆத்திரேலிய, நியூசிலாந்து, மற்றும் அமெரிக்க விமானங்களும் கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன.


இம்மாதம் 8 ஆம் நாள் கோலாலம்ப்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங்கு நோக்கிப் புறப்பட்ட போயிங்777 விமானம் புறப்பட்ட ஓரு மணி நேரத்தினுள் தொடர்புகளை இழந்தது. அமெரிக்க செய்மதிகளின் தகவல்களின் படி, விமானம் திசை திருப்பப்பட்டு வேறு திசையில் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


விமானத்தைத் தேடும் பணியில் மலேசியாவுடன் மேலும் 25 நாடுகள் இணைந்து கொண்டன.


மூலம்[தொகு]