உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து விட்டதாக மலேசியா அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 25, 2014

239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சு விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை எனவும் மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


ஐக்கிய இராச்சியத்தின் வான் விபத்துகளை விசாரணை செய்யும் நிறுவனம் தந்துள்ள தகவல்களின் படி எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்கு நோக்கிப் பறந்ததாகவும், இது கடைசியாக ஆத்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து மேற்கே இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ற பகுதிகள் எதுவும் இப்பரந்த கடற்பகுதியில் காணப்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.


இங்கிலாந்தின் இன்மர்சாட் என்ற செய்மதித் தகவல் சேவை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இம்முடிவு தனக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான கணிப்புகள் இதற்கு முன்னர் எப்போதும் கணிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.


"இதனை அடிப்படையாக வைத்து மலேசிய ஏர்லைன்சு விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு விட்டதாக மிகக் கவலையுடன் அறிவிக்கிறேன்," என மலேசியப் பிரதமர் கூறினார்.


விமானத்தில் இருந்த 239 பேரில் ஒருவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றும், விமானத்தில் இருந்தவர்கள் அனைவரினதும் உறவினர்களுக்கு இத் தகவல்கள் கூறப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.


இதற்கிடையில், விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்தின் பாகங்களைத் தேட இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட முயற்சி மோசமான காலநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆத்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு இன்று அறிவித்திருக்கிறது.


இந்த விமானத்தில் பயணம் செய்த சீனர்களின் உறவினர்கள், சீனத் தலைநகரில் உள்ள மலேசியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மலேசியா இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறது என அவர்கள் குற்றம் சாட்டினர். மறைந்த விமானத்தில் பயணம் செய்த 229 பயணிகளில் 153 பேர் சீனர்கள் ஆவர்.


மூலம்

[தொகு]