மழை நீடிப்பு: மின் பிரச்சினைக்குத் தீர்வாகுமா?

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 24, 2012

தமிழ்நாடு மாநிலத்தின் மின் தேவைகள் அணு, அனல் மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு, நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல் எனப் பல வழிகளில் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கணிசமான அளவு பயன் அளிக்கின்றன.


மாநிலத்தின் மொத்த மின் தேவையின் கணிசமான அளவு நீர் மின் நிலையங்கள் வாயிலாகவே உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், பருவ மழை பொய்த்ததால் நீர் மின் உற்பத்தியும் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. மேலும் கடும் வெப்பத்தால் மின் விசிறிகள் மற்றும் குளிராக்கிகளின் பயன்பாடும் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் வட கிழக்குப் பருவ மழையின் காரணமாக மின் தேவை மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியது. தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் கனமழை பெய்ததால், விவசாயிகள் மின் மோட்டார்களை இயக்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்; குளிர்ந்த தட்பவெப்ப நிலையால் மின் விசிறி மற்றும் குளிராக்கிகளின் பயன்பாடுகளும் பெரிய அளவில் குறைந்துள்ளன. இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் ஓடுவதால் நீர் மின் உற்பத்தியும் திருப்திகரமாக உயர்ந்து உள்ளது. எனினும் இது போன்ற எதிர்பாராத ஒரு வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது கேள்விக்குறியே.


மழை இனியும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலையங்களும் முழு உற்பத்தித் திறனை எட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இதுவும் ஒரு எதிர்பாராத தற்காலிகத் தீர்வு மட்டுமே என்பதையும் அரசு முழுமையாக உணர்ந்து நிலையான மின் உற்பத்தித் திட்டங்களை முடுக்கி விடுவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.