உள்ளடக்கத்துக்குச் செல்

மாலத்தீவு முதியவர்கள் வலையில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பெண்கள்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 21, 2009 தமிழ்நாடு:


பணக்காரர் போல் வேடமிட்டு இந்தியா வரும் மாலத்தீவு ஆண்கள் கேரள, தமிழக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர்.


இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடு மாலத்தீவு. இந்த நாட்டைச் சேர்ந்த பலரும் கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவது வழக்கம். இதற்காக அவர்கள் வருவது கேரளாவுக்குதான். இவர்களில் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்வதற்காகவே இங்கு வருகின்றனர். ஏற்கனவே மாலத்தீவு பெண்ணை திருமணம் செய்துள்ள இவர்கள் 2வது திருமணத்துக்காக இந்தியா வருகிறார்கள்.


இதற்காக இல்லாத ஒரு நோய்க்கு சிகிச்சை பெறுவதாக கூறி விசா வாங்கிவிடுகின்றனர். இங்கு வந்ததும் பெயருக்கு எதாவது ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கேரளாவில் உள்ள புரோக்கர்கள், இந்த தாத்தாக்களுக்கு இளம்பெண்களை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவ ட்டத்தைச் சேர்ந்த பல இளம் பெண்களை இப்படி மாலத்தீவு தாத்தாக்கள் திருமணம் செய்துள்ளனர். இந்த தாத்தாக்கள் குறிவைப்பது ஏழை குடும்பத்தை தான்.


தங்களை பெரும் பணக்காரர்கள் என்று கூறி அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். திருமணம் முடிந்து மாலத்தீவு செல்லும்போதுதான், தாத்தாவின் சுயரூபம் தெரியும். கோடீஸ்வரர் என்று கூறியவர் அங்கு ஓட்டாண்டியாக இருப்பார். இதுதவிர அவருக்கு ஏற்கனவே பெரிய குடும்பமும் இருக்கும்.


இதனால், அதிர்ச்சி அடைந்த பல பெண்கள் ஒரு சில மாதங்களிலேயே இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். இப்படிதான் மாலத்தீவை சேர்ந்த காது கேட்காத, கால்கள் ஊனமுற்ற 55 வயது ஆசாமி ஒருவர் தனக்கு சொந்தமாக 2 கப்பல்கள் இருப்பதாக புருடாவிட்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்தார்.


அங்கே போனதும்தான் அவர் சாதாரண மீனவர் என்று அந்த சிறுமிக்கு தெரிந்தது. குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அந்த மீனவருடன் குடும்பம் நடத்திய அந்த பெண் சில ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிவிட்டார்.


பெண் குழந்தை பிறந்தால் குழந்தையோடு மனைவியையும் இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இந்த மோசடியை தடுக்க நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரத்தில் உள்ள மாலத்தீவு துணை தூதரகத்துக்கு கேரள கிராம பஞ்சாயத்து ஒன்று முறையிட்டுள்ளது

மூலம்

[தொகு]