மாலியில் இராணுவத் தலையீட்டுக்கு ஐநா பாதுகாப்புப் பேரவை கொள்கையளவில் இணக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 13, 2012

மாலியின் வடக்குப் பகுதியை இசுலாமியப் போராளிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றுவதற்கு ஏதுவாக இராணுவத் தலையீட்டுக்கு வழி ஏற்படுத்தும் தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை எடுத்துள்ளது.


இராணுவத் தலையீடு பற்றிய விரிவான திட்ட அறிக்கை ஒன்றை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புப் பேரவை ஆப்பிரிக்க அமைப்புகளிடம் இருந்து கேட்டுள்ளது. விரிவான திட்டம் இல்லாமல் இராணுவத் தலையீட்டை அனுமதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் இதுவரையில் கூறி வந்துள்ளது.


கடந்த மார்ச்சு மாதத்தில் மாலியின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டவுடன் அந்நாட்டின் வடக்குப் பகுதியை இசுலாமியப் போராளிகளும் துவாரெக் போராளிகளும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.


மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் எக்கோவாசும் மாலி அரசும் பன்னாட்டு இராணுவத்தினரை மாலியின் வடக்கே அனுப்புவதற்கு அதிகாரம் தருமாறு ஐக்கிய நாடுகளிடம் கேட்டிருந்தன.


இசுலாமியப் போராளிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடுமையான இசுலாமிய சரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சென்ற வாரம் அங்கு சென்று திரும்பிய ஐநா அதிகாரி இவான் சிமோனொவிச் தெரிவித்திருந்தார்.


மூலம்[தொகு]