மாலியில் துவாரெக் போராளிகளின் சோதனைச் சாவடி மீது தாக்குதல், ஏழு பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 27, 2013

மாலியின் வடக்கே கிடால் நகரில் உள்ள சோதனைச் சாவடி மீது தற்கொலைக் கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். பிரெஞ்சு இராணுவத்தினருக்கு உதவியாக சோதனைச் சாவடி அமைத்திருந்த எம்என்எல்ஏ என அழைக்கப்படும் அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் என்ற துவாரெக் போராளிக் குழு ஒன்றின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


மாலியின் வடக்கே கிடால் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்தும் இசுலாமியப் போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனாலும், ஆங்காங்கே இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.


மாலியின் வடக்குப் பகுதி பெரும்பாலும் இசுலாமியப் போராளிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டாலும், உள்ளூர் துவாரெக் மக்களிடையே இன்னமும் அச்ச நிலைமை காணப்படுகிறது. மாலிப் படையினரால தாம் துன்புறுத்தப்படுவோம் என அவர்கள் அஞ்சுகின்றனர். மாலி இராணுவத்தினர் அங்கு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன.


துவாரக் போராளிகள் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இசுலாமியப் போராளிகளுடன் இணைந்தே மாலி இராணுவத்தினருடன் சண்டையிட்டு வடக்கின் பல பகுதிகளைப் பிடித்திருந்தனர். ஆனாலும், அவர்கள் பின்னர் இசுலாமியப் போராளிகளிடம் இருந்து விலகி பிரெஞ்சு இராணுவத்தினருக்கு ஆதரவாகக் களம் இறங்கினர்.


கடந்த மாதம் பிரெஞ்சுப் படையினர் கிடால் விமான நிலையத்தைக் கைப்பற்றிய போது துவாரெக் போராளிகள் கிடால் நகரைத் தம் வசப்படுத்தியிருந்தனர். சாட் நாட்டுப் படையினரும் அங்கு சென்று இசுலாமியப் போராளிகளுடன் சண்டையிட்டனர். துவாரெக் மக்களுக்கு விடுதலை வேண்டி எம்.என்.எல்.ஏ இயக்கத்தினர் போராடி வருகின்றனர்.


மூலம்[தொகு]