உள்ளடக்கத்துக்குச் செல்

முகத்தை மூடியபடி பர்தா அணிய பிரான்சில் தடை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 11, 2011

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடியபடி பர்தா அணிந்து செல்வதற்கு பிரான்சில் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகத்தை முழுவதுமாக மூடியபடி சென்றால் அவர்களுக்கு 150 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கவும் பிரான்சிய அரசு காவல்துறையினருக்கு அதிகாரம் அளித்துள்ளது.


முகத்திரை அணிந்த முஸ்லிம் பெண்கள்

புதிய சட்டத்தின்படி முகத்தைக் காட்ட மறுக்கும் பெண்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. அங்கு அவரை அடையாளம் கண்டபிறகு அபராதம் விதிக்கப்படும். பெண்களை பர்தா அணியக் கட்டாயப்படுத்துபவர்களுக்கு அதிக தொகை தண்டமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இந்த சட்டத்தை கடந்த ஆண்டு சூன் மாதத்திலிருந்து அமல்படுத்த அரசு திட்டமிட்டது. ஆனால் இது தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட்ட பிறகு அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகே முகத்தை மட்டும் மூடிச் செல்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.


முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்ற நிலையில் பிரான்சில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பிரான்சில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். பிரான்சில் மொத்தம் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 2,000 பெண்கள் மட்டுமே பர்தா அணிந்து செல்வதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரபு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் சில பகுதிகளில் மட்டும் முகத்தை மூடியபடி பர்தா அணியும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.


பிரான்சின் அரசுத்தலைவர் சர்கோசி விதித்துள்ள இந்த புதிய சட்டத்துக்கு சில முஸ்லிம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாக சில சட்ட அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வரையறுக்கப்படாததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்கள் முகத்தை மூடிச் சென்றாலும் அபராதம் விதிக்க வேண்டுமா என்ற குழப்பமும் உள்ளது. இருப்பினும் இந்த முடிவை வரவேற்போரும் பிரான்சில் உள்ளனர். இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுவதுமாக மூடிச் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]