உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது நபி குறித்த கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பிரான்சு இதழ் மீது குண்டுத்தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 3, 2011

முகம்மது நபி அவர்களைக் கேலி செய்யும் வகையில் பிரான்சிலிருந்து வெளிவரும் 'சார்லி ஹெப்டோ' என்ற அரசியல் கேலி இதழ் சிறப்பு இதழொன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து அவ்விதழின் பாரிஸ் அலுவலகம் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியது.


'சார்லி ஹெப்டோ' இதழ் தனது கடைசிப் பதிப்பில், அடுத்த இதழின் பிரதம ஆசிரியராக முகம்மத் நபி இருப்பார் என அறிவித்திருந்தது. அந்த இதழுக்கு இசுலாமியச் சட்டம் என்று அவ்விதழ் பெயரிட்டு வெளியிட்டிருந்தது. அண்மையில் துனீசியாவில் இசுலாமியக் கட்சி ஒன்று வெற்றியீட்டியது, மற்றும் கடாபிக்குப் பின்னரான லிபியாவில் இசுலாமியச் சட்டம் கொண்டுவரப்படுவது தொடர்பிலான பின்னணியைக் கொண்டு இச்சிறப்பு இதழ் வெளியிடப்படும் எனவும் அது அறிவித்திருந்தது.


இதன்படி நேற்றுப் புதன்கிழமை இந்த சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது. எனினும் இது சந்தைக்குச் செல்லும் முன்னரே நேற்று அதிகாலை அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


பத்திரிகை அலுவலகம் உட்பட அனைத்து உபகரணங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டதாகவும், அனைத்து சிறப்பு இதழ்களும் அழிந்து விட்டன எனவும் சார்லி ஹெப்டொ இதழின் வெளியீட்டாளரும் ஆசிரியருமான கேப் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விதழின் முகப்பில் 'நீங்கள் சிரிக்காவிட்டால் 100 கசையடி' என்று முகம்மது நபி கூறுவது போல் படம் வரையப்பட்டிருந்தது. அதன் உட்பக்கங்களிலும் நபியின் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.


பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை அந்நாட்டுப் பிரதமர் ஃபிரான்சுவா ஃபியோன் கண்டித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் என்பது பிரான்ஸ் சனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் இவ்வாறான வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே 2007 ஆம் ஆண்டில் இதே பத்திரிகை முகம்மது நபியின் 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டிருந்தது. இவை முதன்முதலாக டென்மார்க்கில் வெளியிடப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். டென்மார்க் சித்திரத்தில் வெடிகுண்டு தலைப்பாகை அணிந்தவராக முகமது நபியைக் சித்தரித்திருந்தது. இந்தக் கேலிச்சித்திரத்திற்கு ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தாக்கப்பட்டிருந்தன. கொலை மிரட்டல்கள் காரணமாக கேலிச் சித்திர ஓவியர்கள் சிலர் தலைமறைவாக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.


சார்லி ஹெப்டோ பத்திரிகை அனைத்து மதங்களையும் கேலிக்குட்படுத்தி படங்கள் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்

[தொகு]