முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா வெற்றிக் கோப்பையை வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 8, 2012

ஆத்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்ற மூன்றாவது இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இலங்கை அணியை 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. இதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டிகளில் 2-1 என வெற்றியைப் பெற்ற ஆத்திரேலியா அணி கோப்பையை வென்றது.


நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பு செய்ய தீர்மானித்தது. துடுப்பெடுத்தாடிய ஆத்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து இழப்பிற்கு 231 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வார்னர் 48 ஓட்டங்களும், பிரட் லீ 32 ஓட்டங்களும் பெற்றனர். மகரூப், ஹேரத் ஆகியோர் ஒவ்வொருவரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குலசேகரா 2 விக்கெட்டுகளையும் தில்சான் 1 விக்ககட்டையும் பெற்றுக்கொண்டார்.


ஆத்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வாட்சன் அணியை வழி நடத்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியின் முதல் 4 விக்கட்டுக்களும் 53 ஓட்டங்களுக்கு சரிந்தன. இன்றைய ஆட்டத்தில் உபுல் தரங்க கூடிய ஓட்டமாக 71 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மேக்கே 28 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கட்டுக்களையும், பிராட் லீ 3 விக்கட்டுக்களையும் வீழத்தினர். இப்போட்டியில் ஆட்டநாயகனாக ஆத்திரேலியப் பந்துவீச்சாளர் மேக்கே தெரிவானார். இத் தொடரின் நாயகனாக இலங்கை அணியின் டில்ஷான் தெரிவானார்.


இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது அணியான இந்தியா ஆரம்பம் முதலே தோல்விகளை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]