முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 19, 2013

2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசுப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்காக நேற்று மே 18 நினைவு நாளை இலங்கை, மற்றும் உலகத் தமிழர் உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்தனர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் மே 17 வெள்ளிக்கிழமை தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நேற்று அதிகாலை முதல் வளாகத்தைச் சுற்றிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் தவிர்ந்த வேறு எவரும் உள்ளே செல்லாதவாறு படையினர் தடுத்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அங்கு இவ்வாறு இடம்பெற்ற நினைவு நிகழ்வு படையினரால் தடுக்கப்பட்டது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா நகர சபை மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் கூட்டமும் இடம்பெற்றன. பெருமளவான மக்களும் பெற்றோரை இழந்த சிறுவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ. சரவணபவன், எஸ். சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வி. ஆனந்தசங்கரி, சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த சிறி ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்திலும் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோருடன் கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

லண்டனில்

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் மார்பிள் ஆர்ச் பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் பிக்காடிலி சர்க்கஸ் வரை தொடர்ந்தது. இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில், அங்கு நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை பிரித்தானியப் பிரதமரும், பக்கிங்ஹாம் அரண்மனையும் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். மாலை 4 மணி அளவில் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இதில் இந்தியக் கம்யூனிச கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் தா. பாண்டியன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர்.

சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் வணக்க நிகழ்வுகள் சூரிச் நகரில் எல்வேசியா பிளாத்சு திடலில் நடைபெற்றது. நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சுவிஸ் டொச் மொழியிலும் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

சென்னையில்

தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்து பதாகை ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் இறந்த சொந்தங்களை நினைவு கூர்ந்தனர். தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிட்டனர்.

அவுத்திரேலியாவில்

அவுத்திரேலியாவின் மெல்பேர்ண், மற்றும் சிட்னியின் பிளாக்டவுன் என்ற இடத்திலும் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.


மூலம்[தொகு]