யாழ்ப்பாணத்தில் நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வியாழன், சூன் 21, 2012

இலங்கையின் வடக்கே இராணுவத்தால் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.


நாடாளுமன்றில் இடம்பெற்ற மாலபே வைத்தியக் கல்லூரி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கும் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் 25 வருடங்களாக மீள்குடியேற முடியாமல் இருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் சனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாமல் உள்ளது," என்றார்.


வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முகப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள். மக்கள் மீது கழிவு எண்ணெயும் ஊற்றப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் அளிக்க, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் முயன்ற போது அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்று கொண்டிருந்த போது, புன்னாலைக் கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் பயணித்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


இதே வேளையில், யாழ் நகரில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் யாழ் பேருந்து நிலையப் பகுதியில் பிற்பகலில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் திரண்டிருந்த போது அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்கள் இடம்பெறக் கூடும் என்ற காரணத்தைக்காட்டி, இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என யாழ் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரியதையடுத்து, நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


மூலம்[தொகு]