ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்பு
திங்கள், நவம்பர் 2, 2009
வான் பயண மின்னணுவியல் (avionics) வல்லுநரான முனைவர் கே. ராதாகிருஷ்ணன் (குரியக்கட்டில் ராதாகிருஷ்ணன்) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) (இஸ்ரோ) தலைவராகவும் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் விண்வெளித்துறையின் செயலராகவும் முப்பொறுப்புகளை 31 அக்டோபர், 2009 அன்று ஏற்றார்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ஜி.மாதவன் நாயரின் பதவிக் காலம் அக்டோபர் இறுதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள பல்கலைக்கழகத்தில் 1970-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், ஐஐஎம் பெங்களூரில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் ஐஐடி கரக்பூரில் டாக்டர் பட்டம் பெற்றார்.
1971-ல் இஸ்ரோவில் வான்பயண மின்னணுவியலில் பொறியாளராக சேர்ந்தார். பின்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய விண்வெளி திட்டங்களில் அவரது பங்கு அளப்பரியது.
பிராந்திய ரிமோட் சென்சிங் சேவை மையத்தின் இயக்குநர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடல் மேம்பாட்டுத் துறையில் சுனாமி எச்சரிக்கை அமைப்பின் திட்ட இயக்குநரகாவும் பணிபுரிந்துள்ளார்.
மூலம்
[தொகு]- Dr K Radhakrishnan takes over as Secretary, Department of Space, Chairman, Space Commission and Chairman, ISRO, இஸ்ரோ வலைத்தளம், அக்டோபர் 31, 2009
- "இஸ்ரோ புதிய தலைவர் கே.ராதாகிருஷ்ணன்". தினமணி, அக்டோபர் 25, 2009