லிபியா விடுதலை அடைந்து விட்டதாக புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 24, 2011

லிபியாவின் தேசிய விடுதலையை லிபிய இடைக்கால அரசு நேற்றுப் பிரகடனப்படுத்தியது. முன்னாள் தலைவர் முஅம்மர் கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட பெங்காசி நகரில் பல்லாயிரக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் தேசிய இடைக்காலப் பேரவையின் பிரதி தலைவர் அப்துல் ஹாஃபிஸ் கோஜா லிபியாவின் விடுதலையை அறிவித்தார்.


நேட்டோப் படையினரின் ஆதரவில் இடைக்காலப் பேரவையின் படையினர் கடாஃபியின் செர்ட் நகரைக் கடந்த வியாழன் அன்று கைப்பற்றி கதாஃபியையும் சுட்டுக் கொன்றனர்.


இதற்கிடையில், கடாஃபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடாஃபி பிடிக்கப்பட்ட சமயத்தில் உயிரோடு இருந்துள்ளார் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று காட்டும் கைத்தொலைபேசி வீடியோ படங்கள் மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.


கடாஃபியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட போது, அவரது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது தெளிவாகியுள்ளது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கழிவிடக் கால்வாய் ஒன்றில் பதுங்கியிருந்த கடாஃபியைக் கண்டுபிடித்த கிளர்ச்சியாளர்கள் அவரை தரையில் உயிருதன் இழுத்துக் கொண்டு சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. பின்னர் அவர் இறந்து கிடந்த காணொளிகள் காட்டப்பட்டுள்ளன. "யார் அவரைக் கொன்றது அல்லது எந்தத் துப்பாக்கியால் அவர் சுடப்பபாட்டார் என்பது தெரியாது," என கடாஃபியைக் கைப்பற்றிய படைகளின் தளபதி ஒம்ரான் அல்-அவெய்ப் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


கடாஃபியினதும், அவருடன் கொல்லப்பட்ட அவரது மகன் முதாசிம் ஆகியோரின் உடல்கள் மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி பதனப்படுத்தப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. சடலங்களைப் பார்க்க அலை மோதுகின்ற மக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தியபடி, சென்றுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.


அடுத்த ஆண்டு யூன் மாதம் அளவில் சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெறும் என பதில் பிரதமர் மகுமுத் ஜிப்ரில் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]