உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 20, 2011

லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டு விட்டதாக தேசிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது. கடாபியின் ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமும் கடாபியின் பிறந்த இடமுமான சேர்ட் நகரை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இடைக்கால அரசுப் படையினர் அறிவித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய இடைக்காலப் பேரவையின் புதிய கொடிகள் நகரின் பல கட்டடங்களிலும் பறக்க விடப்பட்டுள்ளன.


முஅம்மர் கடாபி.

முன்னதாக கடாபியின் கால்கள் இரண்டிலும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் பிடிபட்டுள்ளதாக அரசுப் படையினர் அறிவித்திருந்தனர். லிபியாவின் பதில் பிரதமர் மகுமுத் ஜிப்ரில் கடாபி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். உயிருடன் பிடிபட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் அவர் கொல்லப்பட்டார் என அவர் தெரிவித்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வழியில் அவர் இறந்துள்ளார்.


வீதிகளில் அவர் இழுத்துச் செல்லப்பட்டதைக் காட்டும் காணொளிகள் காட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் அப்போது உயிடன் இருந்தாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், "லிபியப் புரட்சி இன்று வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் லிபியாவுக்கு ஒரு முக்கிய நாள்" எனக் கூறினார்.


1969ம் ஆண்டு லிபியாவின் தலைவரான கேணல் கடாபி தொடர்ச்சியாக லிபியாவை ஆட்சி செய்து வந்தார். அண்மையில் கடாபி பதவி விலக வேண்டுமென அந்த நாட்டுக் கிளர்ச்சிக் குழுக்கள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கடாபி அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே கிளர்ச்சிக் குழுவினருக்கும் கடாபியின் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கடாபி பதவி விலக வேண்டும் என்ற கிளர்ச்சிக் குழுவின் கோரிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கி கடாபியின் படைகள் மீது நேட்டோ படைகளை அனுப்பி தாக்குதல்களும் நடத்தின


கடாபி கடந்த ஆகத்து மாதத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தலைநகர் திரிப்பொலியை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியதை அடுத்து கடாபி தலைமறைவானார். அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளனர் அல்லது தலைமறைவாயுள்ளனர்.


மூலம்

[தொகு]