வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்
- வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்
- வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
- வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி
- வட மாகாணசபைத் தேர்தல், 2013: வன்முறைகளுக்கு நடுவில் இன்று தேர்தல்
செவ்வாய், செப்டெம்பர் 24, 2013
இலங்கையின் முதலாவது வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேசுவரனை நியமிப்பதற்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டமொன்று நேற்று மாலை 4.30 மணியளவில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தேர்தல் மூலம் தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கூட்டமைப்பின் செயலாளர் மாவை. சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் எஸ். சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வடமாகாணசபையின் முதலமைச்சராகவும் மாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் குழுத் தலைவராகவும் முன்னாள் நீதியரசர் சி. வி. விக்கினேஸ்வரனின் பெயரை திருமதி அனந்தி சசிதரன் பிரேரிக்க வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் வழிமொழிந்தார். இதனையடுத்து ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடமாகாணசபைத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவுடன் முதலமைச்சர் தெரிவுக்கான கடிதம் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஐந்து மாகாண அமைச்சர்கள் தெரிவு குறித்தும், கூட்டமைப்பினருக்குக் கிடைத்த இரண்டு கூடுதல் இடங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது என்பது குறித்தும் தீர்மானிப்பதற்காக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களது கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் 38 இடங்களில் 30 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி வரலாற்று ரீதியான சாதனையைப் படைத்திருக்கின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஏழு இடங்களையும், முசுலிம் காங்கிரசு ஒரு இடத்தையும் கைப்பற்றியிருந்தது.
சி. வி. விக்னேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அனந்தி சசிதரன் 87,870, தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715, இம்மானுவேல் ஆனல்ட் 26,888, சி.வி.கே.சிவஞானம் 26,747, பாலச்சந்திரன் கஜதீபன் 23,669, கனகலிங்கம் சிவாஜிலிங்கம் 22,660, ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268, சந்திரலிங்கம் சுகிர்தன் 20,541, கேசவன் சயந்தன் 20,179, விந்தன் கனகரட்னம் 16,463, அரியகுட்டி பரஞ்சோதி 16,359, ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் 14,761, வேலுப்பிள்ளை சிவயோகன் 13,479 வாக்குகள் பெற்றுத் தெரிவாயினர். ஏனையோர் பெற்ற வாக்குகள்: கே.தர்மலிங்கம் 13,016, சபாரத்தினம் குகதாஸ் 11,256, எம்.தம்பிராசா 7,325, ஆர்.ஜெயசேகரம் 6,775, வி.சுப்பிரமணியம் 6,578.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் கந்தசாமி கமலேந்திரன் 13,632, அங்கஜன் இராமநாதன் 10,031 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாயினர். ஏனையோர் பெற்ற வாக்குகள்: சின்னத்துரை தவராசா 9,803, ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் 5,462, அலெக்சாண்டர் சூசைமுத்து 4,666, பாலகிருஷ்ணன் சிவகுரு 4,611, அப்துல் கரீம் நுவான் சிராஸ் முகமட் 3,323, அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் 2,487, அகிலதாஸ் சிவக்கொழுந்து 2,482, குமாரகுரு சர்வானந்தன் 2,293, நடராஜா தமிழழகன் 1,976, நாகன் கணேசன் 1,966, சுந்தரம் டிவகலாலா 1,963, ஞானசக்தி சிறிதரன் 1,939, முடியப்பு றெமிடியஸ் 1,801, கதிரவேலு செவ்வேள் 1,605, கோடீஸ்வரன் றுசாங்கன் 1,174, அகமட் சுல்தான் சுபியான 1,046, மற்றும் நாகனாதி பொன்னம்பலம் 797.
மூலம்
[தொகு]- வட மாகாண முதலமைச்சராக சிவி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு, தமிழ்மிரர், செப்டம்பர் 23, 2013
- விக்கினேஸ்வரனை முதல்வராக்க உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகாரம், வீரகேசரி, செப்டம்பர் 24, 2013
- முதலமைச்சர் பதவிக்குரியவராக விக்னேஸ்வரன் தேர்வு, பிபிசி, செப்டம்பர் 23, 2013