வரி ஒப்பந்தத்தைத் தக்க வைக்க மொரீசியசு இரண்டு தீவுகளை இந்தியாவுக்கு அளிக்க முன்வந்துள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 6, 2012

இந்தியாவுடனான வரி ஒப்பந்தத்தைத் தக்க வைத்துக் கொள்ள மொரீசியசு நாடு தனது இரண்டு தீவுகளை இந்தியாவுக்குத் தர முன்வந்துள்ளதாக டைம்சு ஒஃப் இந்தியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அகலேகா தீவுகள்

மொரீசியசில் இருந்து 1,100 கிமீ தொலைவில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு அகலேகா தீவுகளை இந்தியா சுற்றுலா, அல்லது தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என மொரீசியசின் வெளியுறவு மற்றும் தொழிற்துறை அமைச்சர் அர்வின் பூலெல் தெரிவித்துள்ளார். இவற்றின் மொத்தப் பரப்பளவு 70 சதுர கிமீகள் ஆகும்.


வடக்கு அகலேகாவில் விமான இறங்குபாதை ஒன்றும் உள்ளது. மொரீசியசை விட இந்தியாவுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த இரண்டு தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 2006 ஆம் ஆண்டில் ஆரம்பக் கட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.


1983 ஆம் ஆண்டில் மொரீசியசு இந்தியாவுடன் இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இதன் படி, மொரீசியசில் இயங்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் பெருக்கும் மூலதன இலாபத்திற்கு மொரீசியசில் மட்டுமே வரி விதிக்கப்படும். ஆனால், மொரீசியசில் மூலதன வரி நடப்பில் இல்லாததால் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள் இரண்டு நாடுகளிலும் வரி கட்டாமல் ஏய்த்து வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் மொரீசியசு ஊடாகவே இந்தியா வருகின்றன. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா தற்போது மொரீசியசு நாட்டுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது.


மூலம்[தொகு]