வாச்சாத்தி பாலியல் வன்முறை வழக்கில் 215 பேருக்குத் தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்தெம்பர் 30, 2011

தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராம‌‌த்தில் 1992 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பாலியல் வன்முறைத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்துள்ளார்.


இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள். இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் பலாத்காரம்) பிரிவின் கீழ் 17 பேருக்கு 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 12 பேருக்கு 3(2) வி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை கட்டத் தவறினால் 30 மாதம் சிறைவாசம். மற்ற குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


ஏனையோர் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்க்ப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மு்தல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தர்மபுரி மாவட்டத்தின் மலைக் கிராமமான வாச்சாத்தியில் சந்தன மரங்கள் வெட்டி பதுக்கி வைத்திருப்பதாக வனம், காவல், வருவாய் ஆகிய மூன்று துறைகளை சேர்ந்த 269 பேர் 1992 சூன் 20 ஆம் நாள் சோதனையிட சென்றனர். மூன்று நாட்கள் அங்கேயே முகாமிட்டு நடந்த சோதனையில் தொன் கணக்கில் சந்தன கட்டை கைப்பற்றப்பட்டன. 90 பெண்கள், 28 குழந்தைகள் உட்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்த விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது அதிகாரிகள் 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டு, அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அவ்வூர் மக்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த புகார்களை அன்றைய திமுக அரசு ஆரம்பத்தில் மறுத்தது.


இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வழக்கில் பாலியல் புகார் இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது


இந்த தீர்ப்பு குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், "வரலாற்று சிறப்பு மிக்க வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு தலா ரூ.15 ஆயிரம் அறிவித்துள்ளார்கள். இந்த தொகை போதாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்," என்றார்.


மூலம்[தொகு]