விக்கிப்பீடியா நிறுவனருக்கு சுவிட்சர்லாந்தின் உயர் விருது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 29, 2011

விக்கிப்பீடியா கலைக்களஞ்சிய இணையத்தளத்தின் நிறுவனர் ஜிம்மி வேல்சு 2010 ஆம் ஆண்டுக்கான சுவிட்சர்லாந்தின் பிரபல்யம் வாய்ந்த கோட்லிப் டட்வெய்லர் விருதைப் பெற்றுள்ளார். இந்த விருது இவருக்கு 2011, சனவரி 26 இல் வழங்கப்பட்டது. சமூகத்துக்கு மேற்கொண்ட பெரும் சேவைக்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.


ஜிம்மி வேல்சு கோட்லிப் டட்வெய்லர் விருதைப் பெறுகிறார்.

கலை, அரசியல், மற்றும் வணிகத்துறையில் புகழ்பெற்ற முன்னூறிற்கும் அதிகமானோர் இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது கருத்துரைத்த, ஜிம்மி வேல்ஸ், இது ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் கொபி அன்னனிடம் பெற்ற விருதுக்கு ஒப்பான விருது எனக் குறிப்பிட்டுள்ளார்.


விக்கிபீடியா தற்போது 270 மொழிகளில் சுமார் 400 மில்லியன் பேரை தமது பார்வையாளர்களாக கொண்டுள்ளது. இந்தநிலையில் "அறிவு எமது முக்கிய வளம்," என ஜிம்மி குறிப்பிட்டுள்ளார். அதுவே சமுதாயத்துக்கு சிறந்த சேவைகளை செய்தவதற்கான ஆதாரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, எதிர்காலத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தமது அலுவலகங்களை திறக்கப் போவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் தமது இணையத்தளத்தை பல்வேறு மொழிகளிலும் விருத்தி செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கோட்லிப் டட்வெய்லர் விருது 100,000 சுவிசு பிராங்குகள் பெறுமதியானதாகும். கோட்லிப் டட்வெய்லர் ஆய்வுக் கழகம் இப்பரிசை வழங்குகிறது. இந்த ஆய்வுக் கழகமும் விருதும் மைகுரோசு பல்பொருள் அங்காடிக் குழுவின் நிறுவனர் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் டட்வெய்லரின் 70வது பிறந்த நாளுக்கு அவருக்கு 200,000 சுவிசு பிராங்குகள் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தப் பணத்தை முதலீடாக வைத்து சமூக, கலாசார மற்றும் பொருளாதாரத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் ஒருவருக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. இப்பரிசு சில ஆண்டுகளுக்கு ஒரு முறையே வழங்கப்பட்டு வந்தது. அவ்வகையில் கடைசியாக ஐநாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கொஃபி அனான் அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.


மூலம்[தொகு]