உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 17, 2012

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ச்சிற்கு எவ்வித முன்நிபந்தனையும் இன்றித் தம் நாட்டில் அடைக்கலம் தருவதாக இலத்தீன் அமெரிக்க நாடான எக்குவடோர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எக்குவடோரின் இந்த அறிவிப்பை அடுத்து இப்பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து ஐக்கிய இராச்சியத்திற்கும், எக்குவடோரிற்கும் இடையில் தூதரக மட்டத்திலான முறுகல் நிலை தோன்றியுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சுவீடனில் தேடப்பட்டு வந்த ஜூலியன் அசான்ச் கடந்த சூன் மாதத்தில் லண்டனில் உள்ள எக்குவடோர் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு இது என அவர் கூறியுள்ளார்.


தனது நாட்டை விட்டு அசான்ச் வெளியேற முடியாது என ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது. ஆனாலும், இங்கிலாந்துடனான பேச்சுவார்த்தைகள் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க உதவும் என எக்குவடோரின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிபிசிக்குத் தெரிவித்திருக்கிறார்.


எக்குவடோரின் சுதந்திரமான இத்தீர்மானத்தை ஐக்கிய இராச்சியம் மதிக்க வேண்டும் எனக் கூறிய ரிக்கார்டோ பர்ட்டீனோ, அல்லாவிடில் பன்னாட்டு சட்டத்தின் படி அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.


அசாஞ்சின் விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் உட்பட வெளிநாட்டுத் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுவீடனுக்கு நாடு கடத்தினால் அது தம்மை அமெரிக்க நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் என அசாஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.


மூலம்

[தொகு]