விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 14, 2012

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருத்திற் கொண்டு அதனை தடை செய்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சின் செயலாளர் தர்மேந்திரா ஷர்மா தெரிவித்தார்.


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதன் போது இவ்வியக்கத்தின் தலைவர் வி.பிரபாகரனும் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னதாக இந்த தடை உத்தரவானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.


2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னும் இத் தடை நீடிக்கிறது.


இவ்வியக்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் உறுப்பினர்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாகவும் அவர்கள் இவ்வியக்கத்தை தொடர்ந்து கட்டியெழுப்ப முற்படுவதாகவும் அதேவேளை இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும் அதில் அங்கம் வகித்தவர்கள் தனித் தமிழீழம் குறித்த முன்னெடுப்புகளை இதுவரையிலும் கொண்டிருக்கின்றனர் எனவும் இதனை நிறைவேற்றுவதற்காக அவர்கள் சர்வதேச ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நடைமுறைகள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவை எனவும் இந்திய மத்திய உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


மூலம்[தொகு]