உள்ளடக்கத்துக்குச் செல்

விண்வெளிக்கு அனுப்பப்படும் முதலாவது பேசும் 'எந்திரன்' கிரோபோ

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 4, 2013

பேசும் இயந்திர மனிதன் ஒன்று முதற் தடவையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சப்பான் இந்த எந்திரனை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் விண்வெளிக்குச் செல்லவிருக்கும் சப்பானிய விண்வெளி வீரர் கோச்சி வக்காட்டாவிற்குத் துணையாக இந்த எந்திர மனிதன் தொழிற்படும்.


கிரோபோ என அழைக்கப்படும் இந்த எந்திர மனிதனை ஆளில்லா விண்கலம் ஒன்று தனிகாசீமா தீவில் இருந்து கொண்டு சென்றுள்ளது. இக்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் செல்கிறது. விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் 6 விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய பொருட்களையும் இது காவிச் சென்றுள்ளது.


34செமீ உயரமும் 1 கிகி எடையும் கொண்ட கிரோபோ என்ற இயந்திர மனிதன் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை ஆகத்து 9 ஆம் நாள் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சப்பானிய மொழியில் பேசக் கற்றுக் கொண்டுள்ளது. 2013 நவம்பரில் செல்லவுள்ள கோச்சி வக்காட்டாவுடனான பேச்சுக்களை இது பதிவு செய்யும். அத்துடன் கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து செல்லும் செய்திகளை வக்காட்டாவுக்கு எடுத்துச் சொல்லும்.


விண்வெளியில் பல மாதங்களாகத் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு உணர்வு பூர்வமான துணையை இயந்திரங்கள் எவ்வாறு வழங்க முடியும் என்பதைப் பற்றிய ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த எந்திரன் அனுப்பப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]