15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 14, 2011

நாளை புதன்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை நாளை இரவு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பார்க்க முடியும்.


சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும். இந்த கிரகணங்கள் உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா சமயங்களிலும் தெரிவதில்லை. கிரகணங்களின் சுற்றுப்பாதையில் மேற்கூறிய குறுக்கீடுநேரத்தைப் பொறுத்து கிரகணங்கள் அமைவதால் இவை சில நாடுகளில் மட்டுமே தெரிகின்றன.


நடுவானில் தோன்றும் இந்த சந்திர கிரகணத்தை கொல்கத்தாவில் நள்ளிரவு 12.52 மணி முதல் 2.32 மணிவரை நீண்ட நேரம் பார்க்க முடியும். அதை தொடர்ந்து 16ந் திகதி அதிகாலை 3.52 மணி வரை பாதி அளவு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் வட்டம் முழுவதும் தெரியும். ஆனால் சந்திரன் ஒளி இழந்து சிவப்பு நிறத்தில் தெரியும். கிரகணம் முழுமையடையும்போது அதிகம் ஒளி இழந்து காணப்படும். இந்தியா மட்டுமின்றி ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள பாதி மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் இந்த சந்திரகிர கணம் தெரியும். இந்த சந்திர கிரகணத்தின் தொடக்க நிகழ்ச்சியை ஐரோப்பிய நாடுகளில் முழுமையாக காண முடியாது. ஏனெனில் இங்கு சந்திரோதயத்துக்கு முன்பே சந்திர கிரகணம் தொடங்கிவிடும்.


வரும் சூலை 1-ம் தேதி பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஆனால் அது இந்தியாவில் தெரியாது அடுத்த சந்திரகிரகணம் இந்தியாவில் வருகிற டிசம்பர் 10ந் திகதி ஏற்படும். அப்போது 25 நிமிடம் மட்டுமே பார்க்க முடியும். இதற்கு அடுத்தபடியாக வருகிற 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிதான் முழு சந்திர கிரகணம் தோன்றும். இந்த தகவலை எம்.பி. பிர்லா கோளரங்க இயக்குனர் டி. பி. துரை தெரிவித்தார்.


மூலம்[தொகு]