2002 குஜராத் வன்முறை: பாஜக தலைவர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டு கால சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 31, 2012

2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற மத வன்முறைகளில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு உடந்தையாக இருந்தமைக்காக பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருக்கு இந்திய நீதிமன்றம் ஒன்று 28 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது.


முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவுமான மாயா கொட்னானி என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரின் புறநகரான நரோதா பாட்டியாவில் இடம்பெற்ற இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்ட மேலும் 30 பேருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


2002 பெப்ரவரி 27 ஆம் நாள் அயோத்தியாவிலிருந்து சபர்மதி விரைவு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் இறந்த இந்நிகழ்வு 790 இசுலாமியரும் 254 இந்துக்களும் பரந்தளவில் கொல்லப்பட்ட குசராத் வன்முறைக்குத் தூண்டுதலாக அமைந்தது. அண்மைக்காலங்களில் இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான மதக்கலவரமாக இது பார்க்கப்படுகிறது.


கலவரம் இடம்பெற்ற காலப்பகுதியில் மாயா கொட்னானி அமைச்சராகப் பதவியில் இருக்கவில்லை. பின்னாளில் 2007 ஆம் ஆண்டில் நரேந்திர மோதியின் அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சராகப் பதவியேற்றார். படுகொலைகள் தொடர்பாக இவர் 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட போது அமைச்சர் பதவியைத் துறந்தார். ஆனாலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். பஜ்ராங் தால் என்ற இந்து அமைப்பின் முன்னாள் தலைவர் பாபு பச்சிராங்கி என்பவருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தல்கள் இவ்வாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் நிலையில் இன்றைய தீர்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி முயலலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


மூலம்[தொகு]