உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி மக்கிலொப் ஆத்திரேலியாவின் முதலாவது புனிதரானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

மெல்பேர்ணில் பிறந்து உதவி தேவைப்பட்ட குழந்தைகளுக்கு சேவை புரிந்த துறவி மேரி மக்கிலொப் (1842–1909) ஆத்திரேலியாவின் முதலாவது புனிதராக போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட்டினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


புனிதர் மேரி மக்கிலொப்

மேரி மக்கிலொப்புடன் மேலும் ஐவர் புனிதர்களாக போப்பாண்டவரினால் இன்று வத்திக்கானில் இடம்பெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவில் அறிவிக்கப்பட்டனர். ஆந்திரே பெசெ கனடாவையும், ஹூவானா பரியோலா எசுப்பானியாவையும், ஸ்தனிஸ்லாவ் கசிமியெர்ச்சிக் போலந்தையும், ஜூலியா சால்சனோ மற்றும் கமிலா வரானோ இத்தாலியையும் சேர்ந்தவர்கள். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இன்று ஞாயிறு காலை விழாத் திருப்பலி இடம்பெற்றது.


1909 ஆம் ஆண்டில் இறந்த மேரி மக்கிலொப் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட பாதிரியார்களுடன் சர்ச்சைகளில் ஈடுபட்டமைக்காக உயர்பீடத்திலிருந்த அன்றைய பாதிரியார்கள் இவரை சிறிது காலத்துக்கு துறவிப் பணிகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டிருந்தார்.


வத்திக்கானில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கென பல்லாயிரக்கணக்கான ஆத்திரேலியர்கள் ரோம் நகர் சென்றுள்ளனர். இவர்களில் ஆத்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கெவின் ரட்டும் ஒருவர்.


வறிய மக்கள், குறிப்பாக ஆத்திரேலியப் பழங்குடியினருக்காக மக்கிலொப் பெரும் சேவைகள் புரிந்தவர் ஆக அறியப்படுகிறார். உரிமை இழந்தவர்களுக்கான நீதியின் அடையாளமாக நோக்கப்படுபவர்.


1871 ஆம் ஆண்டில் இவர் கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இறந்து 85 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 இல் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலினால் முத்திப்பேறு பெற்றார்.


மூலம்