ருவாண்டா இனப்படுகொலை: முன்னாள் இராணுவத் தலைவருக்கு 30-ஆண்டு சிறை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 18, 2011

1994 இல் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் சமபந்தப்பட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவத் தலைவர் அகஸ்டின் பிசிமுங்கு என்பவருக்கு 30 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


ருவாண்டாவுக்கான ஐநா போர்க்குற்ற நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அத்துடன் முன்னாள் துணை இராணுவக் காவல்துறைத் தலைவர் அகஸ்டின் இண்டிலியிமனா என்பவரும் குற்றவாளியாகக் கண்டுள்ளது. ஆனாலும் அவர் ஏற்கனவே தனது தண்டனைக்காலத்தை ஏற்கனவே சிறையில் கழித்தமையினால் அவரை விடுவித்தது. மேலும் இரு மூத்த இராணுவ அதிகாரிகள்ளுக்கு 20 ஆண்டுகாலத் தண்டன வழங்கப்பட்டது.


100 நாட்கள் இடம்பெற்ற இப்படுகொலை நிகழ்வில் மொத்தம் 800,000 துட்சி இனத்தவரும், ஊட்டு இன மிதவாதிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.


இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோரை விசாரணை செய்தவதற்காக ஐநா நியமித்த இந்தப் போர்க்குற்ற நீதிமன்றம் அயல்நாடான தான்சானியாவில் கூடியிருந்தது.


59 வயதான பிசிமுங்கு 2002 ஆம் ஆண்டில் அங்கோலாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவர் 1994 ஆம் ஆண்டில் ருவாண்டா இராணுவத்தினருக்கு முழுப் பொறுப்பில் இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இண்டிலியிமனா இராணுவ மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருந்தார் என்றும், படுகொலைகளை அவர் எதிர்த்து வந்திருந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


ஜெனரல் பிசிமுங்கு தனிப்பட்ட முறையில் போராளிகளில் வீடுகளுக்குச் சென்று தூட்சி இனத்தவரைச் சுட்டுக் கொல்லுமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தூட்சிகளை அவர் கரப்பான் பூச்சிகள் எனவே அழைப்பார் என்றும் கூறப்பட்டது.


ருவாண்டாவின் அப்போதைய அரசுத்தலைவர் ஜுவெனல் ஹபியாரிமானா 1994 ஏப்ரல் 6 ஆம் நாள் தலைநகர் கிகாலியில் விமானத்தில் பயணம் மேற்கொண்டபோது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து கொல்லப்பட்டார். இதனை அடுத்தே அங்கு இனக்கலவரம் மூண்டது.


மூலம்[தொகு]