உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோவில் ருவாண்டா போராளிகளின் தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 5, 2012

மேற்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் ருவாண்டாவின் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக கொங்கோ இராணுவம் அறிவித்துள்ளது.


இம்மாத ஆரம்பத்தில் இருந்து தெற்கு கீவு மாகாணத்தில் பல பின்தங்கிய கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாயின. ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படைகள் (FDLR) என்ற இயக்கமே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர்கள் கொங்கோ கிராமத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொது மக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


உள்ளூர் துணை இராணுவத்தினரை மக்கள் ஆதரிப்பதாலேயே தம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் மக்கள் கூறுவதாக இராணுவம் தெரிவித்தது.


1994 இல் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து கொங்கோவில் குடியேறிய ஊட்டு இன மக்களைக் கொண்டு FDLR போராளிக் குழு உருவாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையினர் நிலை கொண்டிருந்தாலும், அங்கு இடம்பெறும் படுகொலைகள், மற்றும் வன்புணர்வுகளுக்கு இப்போராளிக்குழுவே பொறுப்பு எனக் குற்ரம் சாட்டப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]