மாலியில் கிளர்ச்சி இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 22, 2012

கிழக்காப்பிரிக்க நாடான மாலியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்கிய சில மணி நேரத்தில் நாட்டைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர். நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அறிவித்துள்ள இராணுவத்தினர் அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர்.


துவாரெக் இனப் போராளிகளை எதிர்கொள்ளுவதற்கு அரசு போதிய ஆயுதங்களைத் தமக்கு வழங்கவில்லை எனக் கூறி இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் நேற்று புதன்கிழமை அன்று அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராணுவக் கிளர்ச்சியை எக்கோவாஸ் எனப்படும் மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய ஆணையம் கடுமையாக விமரிசித்திருக்கிறது.


வெளியுறவுத்துறை அமைச்சர், மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய காப்டன் அமடோ சனோகோ என்பவர் இன்று காலையில் தொலைக்காட்சியில் தோன்றி தேசிய ஊரடங்கு அமுலில் உள்ளதாக அறிவித்தார். அரசுத்தலைவர் அமடோ துமானி தவுரியின் "தகுதியற்ற அரசை" நாம் கலைத்துள்ளோம் என கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி கூறினார்.


அரசுத்தலைவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது அறிவிக்கப்படவில்லை. ரெட் பெரெட்ஸ் எனப்படும் சிறப்புப் படையினர் இன்னமும் அரசுத்தலைவருக்கு ஆதரவாகவே இருப்பதாகத் தாம் நம்புவதாக என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


கடந்த 20 ஆண்டுகாலமாக மாலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளது. இராணுவத்தினரும், அரசாங்கமும் தமக்கிடையே உள்ள பிணக்குகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என அமெரிக்காவும் பிரான்சும் இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளன.


துவாரெக் மக்கள் தெற்கு அரசாங்கத்தால் புறந்தள்ளப்படுவதாகக் கூறி கடந்த பல ஆண்டுகளாக மாலியின் வடக்கே அசவாத் பகுதியில் சுயாட்சி கோரிப் போராடி வருகிறார்கள். இவர்கள் வடக்கு மாலி, வடக்கு நைஜர், மற்றும் தெற்கு அல்ஜீரியா பகுதிகளில் வாழும் நாடோடி இன மக்கள் ஆவர். துவாரெக் போராளிகள் கடந்த சில மாதங்களில் பல வடக்கு நகரங்களில் இருந்து இராணுவத்தினரை விரட்டியுள்ளனர்.


இன்னும் ஒரு மாதத்தில் அரசுத்தலைவர் தேர்தல் நடக்கவிருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]