சோவியத் தலைவர் ஸ்டாலினின் ஒரே மகள் லானா அமெரிக்காவில் காலமானார்
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 21 மார்ச்சு 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 9 ஏப்பிரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
செவ்வாய், நவம்பர் 29, 2011
சோவியத்தின் முன்னாள் தலைவர் யோசப் ஸ்டாலினின் ஒரே மகள் தனது 85 வது அகவையில் அமெரிக்காவில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லானா பீட்டர்ஸ் என அழைக்கப்படும் சுவெத்லானா அலிலுயேவா நவம்பர் 22 இல் விஸ்கொன்சின் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 1967 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து சுவெத்லான வெளியேறி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியமை அப்போதைய பனிப்போர்க் காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு பிரசார வெற்றியாகக் கருதப்பட்டது. அமெரிக்காவில் சுவெத்லானா சோவியத் பற்றிய தனது குறிப்புகள் அடங்கிய நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
சோவியத்தில் பிரிஜேஷ் சிங் என்ற இந்தியக் கம்யூனிஸ்டிடம் அவர் கொண்டிருந்த நட்புக் காரணமாக பிரிஜேஷ் சிங் சோவியத் அதிகாரிகளினால் மோசமாக நடத்தப்பட்டமையே தாம் அந்நாட்டில் இருந்து வெளியேறத் தூண்டிய காரணம் என சுவெத்லானா கூறியுள்ளார். சிங் என்பவரைத் தனது கணவர் என அவர் பின்னர் கூறியிருந்தாலும், அவரைத் திருமணம் புரிவதற்கு சுவெத்லானாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 1966 இல் பிரிஜேஷ் சிங் இறக்கவே அவரது அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக இந்தியா சென்ற சுவெத்லானா அங்கு 8 மாதங்கள் தங்கியிருந்தார். பின்னர் அவர் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று அரசியல் தஞ்சம் பெற்றார்.
1949 இல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற சுவெத்லானா ஆசிரியையாகவும், மொழிபெயர்ப்பாளர் ஆகவும் பணியாற்றினார். மூன்று தடவைகள் மணம் புரிந்த அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
அமெரிக்காவில் கட்டிடக்கலைஞர் வில்லியம் உவெஸ்லி பீட்டர்ஸ் என்பவரை திருமணம் புரிந்து லானா பீட்டர்ஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றார். 1973 இல் இவர்களது மணம் முறிவடைந்தது. இவர்களுக்கு ஒல்கா என்ற பெண் பிள்ளை உள்ளார்.
1984 இல் சோவியத் ஒன்றியத்துக்குத் திரும்பியவர் அவரது உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் அமெரிக்கா சென்றார். இவர் பிற்காலத்தில் வறுமையில் வாழ்ந்ததாக 1990 இல் செய்திப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவர் குறிப்பிட்டிருந்தார்.
சுவெத்லானா தனது ஆறாவது வயதில் தனது தாயை இழந்தார். தனது தந்தையுடன் இவர் நெருக்கமாக இருந்தாலும், பின்னர் பிற்காலத்தில் அவரிடம் இருந்து விலகியே இருந்தார். சுவெத்லானாவின் முதலாவது காதலர் ஒரு யூதர். இவர் சைபீரியாவுக்கு 10 ஆண்டுகள் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்.
மூலம்
[தொகு]- Stalin's daughter Lana Peters dies in US of cancer, பிபிசி, நவம்பர் 29, 2011
- Lana Peters, Stalin’s Daughter, Dies at 85, நியூயோர்க் டைம்ஸ், நவம்பர் 28, 2011