உள்ளடக்கத்துக்குச் செல்

கினியில் முதற்தடவையாக மக்களாட்சித் தேர்தல் இடம்பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 28, 2010

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் புதிய ஆட்சித்தலைவரைத் தேர்ந்தெடுக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பெருமளவில் மக்கள் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கினி 1958 ஆம் ஆண்டு விடுதலை அடைந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது மக்களாட்சித் தேர்தல் இதுவாகும்.


கினியின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் செக்கூபா கோனேட் நாட்டில் மக்களாட்சியை விரைவில் ஏற்படுத்துவேன் எனச் சூளுரைத்தார். இத்தேர்தலில் தானோ அல்லது தனது அமைச்சரவை அங்கத்தவர் எவரும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.


4.2 மில்லியன் கினியர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 24 பேர் ஆட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.


1958 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து கினியில் இராணுவத் தலைவர்கள் அல்லது சிவில் கொடுங்கோல் ஆட்சியாளர்களே ஆட்சி புரிகின்றனர்.


20 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவியில் இருந்த லன்சானா கொண்டே என்பவர் 2008 ஆம் ஆண்டில் இறந்ததில் இருந்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.


கடந்த ஆண்டு செப்டம்பரில் மக்களாட்சி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது 150 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நாட்டில் குழப்பநிலை நீடித்து வந்தது.


நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து நாட்டை விட்டு லைபீரியாவுக்குச் சென்ற கினியர்கள் பலர் லைபீரியாவின் தலைநகர் மொன்றோவியாவில் 5 கிமீ நீள வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.


முன்னாள் பிரதமர் செலூ டியாலோ, எதிர்க்கட்சித் தலைவர் அல்ஃபா கொண்டே ஆகியோர் உக்கியமாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவர். தேர்தல் முடிவுகள் மூன்று நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கினியில் பெருமளவு பெறுமதி வாய்ந்த போக்சைட்டு, இரும்பு, மற்றும் வைரம் போன்ற தாதுப்பொருட்கள் காணப்படினும் இந்நாடு உலகின் வறுமையான நாடுகளில் ஒன்றாகும்.


மூலம்

[தொகு]