சந்திரனில் இறங்கிய முன்னாள் விண்வெளி வீரருக்கு எதிராக நாசா வழக்குப் பதிவு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 2, 2011

அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரரும், சந்திரனில் நடந்த ஆறாவது மனிதருமான எட்கார் மிட்ச்செல் மீது அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கடந்த புதன்கிழமை அன்று வழக்குப் பதிந்துள்ளது. அப்பல்லோ 14 விண்வெளிப் பயனத்தின் போது நிலவின் மேற்பரப்பில் இறங்கிய எட்கார் மிட்ச்செல் தான் அங்கு பாவித்த படப்பிடிப்புக் கருவி ஒன்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்கிறார் என அறிந்த நாசா அவருக்கு எதிராக மயாமி நகர நடுவண் நீதிமன்றத்தில் இவ்வழக்கைப் பதிந்துள்ளது.


முன்னாள் விண்வெளி வீரர் எட்கார் மிட்ச்செல்

80 வயதான மிட்ச்செல், இப்படப்பிடிப்புக் கருவியை தன்னுடன் வைத்திருக்க நாசா தனக்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும், தனது காலத்தில் விண்வெளி வீரர்கள் தமது பயண நினைவாக சில பொருட்களத் தமதாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர் எனவும் கூறியிள்ளார். இக்கருவியைத் தாம் வைத்திருக்காவிட்டால், அதனை நாசா அழித்திருக்கும் என அவர் வாதாடுகிறார். அது அவர்களுக்கு "ஒரு கழிவுப் பொருளே" என அவர் கூறினார்.


"நாசாவின் பயணங்களில் பாவிக்கப்பட்ட அனைத்துக் கருவிகளும் உடமைகளும் அதிகாரபூர்வமாக வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படாவிட்டால் அவை நாசாவுக்குச் சொந்தமானவை," என நாசா தனது வழக்குப் பதிவில் தெரிவித்துள்ளது. மிட்ச்செலுக்கு இப்புகைப்படக் கருவி வழங்கப்பட்டதற்கான எவ்வித அதிகாரபூர்வ ஆவணங்களும் இருக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது.


நிதி நிலைமை மோசமான நிலையில் மிட்ச்செல் இக்கருவியை விற்க முன்வந்துள்ளார். இது கிட்டத்தட்ட 60,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்கள் வரை விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எட்கார் மிட்ச்செல், அலன் ஷெப்பர்ட் உடன் இணைந்து அப்பல்லோ 14 கப்பலில் 1971 ஆம் ஆண்டில் சந்திரனில் தரையிறங்கினர். இது சந்திரனில் இறங்கிய மூன்றாவது கப்பலாகும். இருவரும் 33 மணி நேரம் சந்திரனில் கழித்தனர். ஷெப்பர்ட், மிட்ச்செல் இருவரும் சந்திரனில் தரையிறங்கிய ஐந்தாவது, ஆறாவது மனிதர்கள் எனப் பேர் பெற்றனர்.


மூலம்[தொகு]