உள்ளடக்கத்துக்குச் செல்

செருமானியப் படையினரின் தாக்குதலில் 5 ஆப்கானியப் படையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 3, 2010

வடக்கு ஆப்கானித்தானில் குண்டூஸ் மாகாணத்தில் செருமனியப் படையினரின் தாக்குதலில் ஐந்து ஆப்கானியப் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக நேட்டோ அறிவித்துள்ளது.


நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு தானுந்துகளில் வந்துகொண்டிருந்த படையினர் மீதே செருமானியப் படையினர் தாக்குதலை நடத்தியிருந்தனர். நிறுத்தல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது தானுந்துகள் சென்றதால் அவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது என நேட்டோ பேச்சாளர் தெரிவித்தார்.


நேற்றுக் காலை தீவிரவாதிகளுடனான சண்டையில் மூன்று செருமானியப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து அவ்விடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த படையினரே இத்தாக்குதலை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


ஆப்கானித்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினரின் தொகையில் செர்மானியர்கள் மூன்றாவது இடத்தை வகிக்கின்றனர்.


வெள்ளி மாலை இடம்பெற்ற சம்பவத்துக்கு தாம் வருந்துவதாக நேட்டோவின் பன்னாட்டு பாதுகாப்பு உதவிப்படை (Isaf) தெரிவித்துள்ளது.


தமது படையினர் பல வகைகளிலும் சமிக்கைகளைக் காட்டி அந்தத் தானுந்துகளை மறித்ததாகவும், ஆனால் அவை நிற்காமலே சென்றதாகவும் நேட்டோ அறிக்கை கூறுகிறது.


"கடைசியில் படையினர் சுட்டதில் குறைந்தது ஐந்து ஆப்கானியப் படையினர் கொல்லப்பட்டனர்.”


ஆப்கானித்தானில் செருமனியின் இராணுவத் தலையீடு செருமனியப் பொது மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படவில்லை என பிபிசி தெரிவிக்கிறது.


தமது படையினரின் எண்ணிக்கையை மேலும் 850 ஆல் (மொத்தமாக 5,350 ஆக) அதிகரிக்க செருமானிய நாடாளுமன்றம் சென்ற பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

மூலம்

[தொகு]