உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்கிஸ்தானில் இனமோதல் தொடருகிறது, 170 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 15, 2010

கிர்கிஸ்தானின் ஓஷ் என்ற தென்பகுதி நகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் கிர்கீச மற்றும் சுறுபான்மையின உஸ்பெக் இனத்தவர்களுக்கிடையில் கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் பல்லாயிரக்கணக்கான உஸ்பெக் இனத்தவர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி அயல் நாடான உஸ்பெக்கிஸ்தானை நோக்கிச் செல்லுகின்றனர்.


இம்மோதல்கள் தொடர்பில் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக லின் பாஸ்கோ என்பவரை தமது தூதுவராக கிர்கிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.


கிர்கீசிய ஆயுததாரிகள் உஸ்பெக் இனத்தவர்களைச் சுட்டுக் கொன்றும் அவர்களின் சொத்துக்களை தீயிட்டுக் கொளுத்தியும் வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை, ஒஷ் நகரில் கடுமையான துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் பி.பி.சி.செய்தியாளரொருவர் தெரிவித்துள்ளார்.


இந்தப் படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பதற்குத் எம்மிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

—ஐநா பேச்சாளர்

முன்னதாக, ஐநா மனித உரிமை ஆணைக்குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை குழந்தைகள் உட்படப் பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதும், பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.


"இந்தப் படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பதற்குத் எம்மிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன," என திருமதி பிள்ளையின் பேச்சாளர் ரூப்பர்ட் கோல்வில் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, கலவரத்தில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கியிருந்தது.


வன்முறைகளைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ரஷ்யாவின் இராணுவ உதவியை இடைக்கால அரசாங்கம் நாடியுள்ள போதும் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் திட்டம் எதுவும் இல்லையென அந்நாடு தெரிவித்துள்ளது. எனினும், கிர்கிஸ்தானின் வடக்குப் பகுதியிலுள்ள தமது படைத் தளத்தைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா படைப் பிரிவொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவ் கடந்த ஏப்ரலில் பதவி கவிழ்க்கப்பட்டதிலிருந்தே அவரின் செல்வாக்கு மிக்க இடமான நாட்டின் தென்பகுதியில் வன்முறைகள் வெடித்தன.


கிர்கிஸ்தானின் மொத்த 5.5 மில்லியன் மக்களில் 15 விழுக்காட்டினர் உஸ்பெக் இனத்தவர் ஆவர்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]