கினி அரசுத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டம்பர் 16, 2010

தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் முடியாத காரணத்தினால் அரசுத்தலைவர் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கினியின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறவிருந்த தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் செகூபா கொனாட்டே அறிவித்து சில மணி நேரத்தின் பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இடைக்காலப் பிரதமருக்கும் சனாதிபதிக்கான இரண்டு வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இரண்டு தேர்தல் அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறி நாட்டில் வன்முறைகள் இடம்பெற்றதை அடுத்து அங்கு தேர்தலுக்கான ஆயத்தங்களில் தடங்கல்கள் ஏற்பட்டன.


தேர்தலுக்கான புதிய திகதிகள் அடுத்த வியாழனறு இரண்டு வேட்பாளர்களுடனும் இடம்பெறவிருக்கும் சந்திப்பை அடுத்து முடிவு செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, 1958 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெறவிருக்கும் முதலாவது மக்களாட்சித் தேர்தல் இதுவாகும். கடந்த சூன் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் எவரும் வெற்றி பெறாததை அடுத்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஞாயிறன்று நாள் குறிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், கினியின் தேர்தல் ஆணையாளர் பென் செக்கு சில்லா கடந்த செவ்வாயன்று நீண்டகால சுகவீனம் காரணமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]