உள்ளடக்கத்துக்குச் செல்

பூமியின் பருமனை ஒத்த கோள்கள் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 21, 2011

நமது சூரியனை ஒத்த விண்மீனைச் சுற்றி வரும் பூமியின் அளவை ஒத்த புறக்கோள்களை முதற் தடவையாக வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


கெப்லர்-20 கோள்கள் நமது சூரிய மண்டலத்துடன் ஒப்பீடு

முன்னொரு காலத்தில் இக்கோள்களில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும், இவற்றில் ஒன்று நமது பூமியை ஒத்த இயல்புகளைக் கொண்டிருந்திருக்கக்கூடும் எனவும் வானியலாளர்கள் கருதுகின்றனர். எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களில் இவையே மிக முக்கியமானதாக இவர்கள் கருதுகின்றனர்.


நேச்சர் என்ற வானியல் ஆய்விதழில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வர்ட்-சிமித்சோனியன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த முனைவர் பிரான்சுவா ஃபிரெசின் என்பவரின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோள்களும் மிகவும் சூடானதாக இருப்பதால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனாலும், இக்கோள்கள் முன்னர் தமது விண்மீனுக்கு மிகத் தூரவாக இருந்துள்ளன என்றும், அப்போது அவற்றின் மேற்பரப்பு நீர் இருக்கும் அளவுக்கு போதிய அளவு குளிர்மையாக இருந்திருக்கின்றன என்றும் ஃபிரெசின் தெரிவித்தார்.


கெப்லர்-20எஃப் என அழைக்கப்படும் கோள் பூமியின் அளவைக் கொண்டுள்ளது. கெப்லர்-20ஈ என்ற மற்றைய கோள் பூமியின் ஆரையை விட 0.87 மடங்கு சிறியதும், 20எஃப் ஐ விட அதன் விண்மீனில் இருந்து கிட்டவாகவும் அமைந்துள்ளது. இவ்விரு கோள்களும் நமது பூமியை ஒத்த இயல்புகளையும், பாறைகளையும் கொண்டுள்ளன.


கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி பல்லாயிரக்கணக்கான ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள சிறிய கோள்களையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் படைத்தது என இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என வானியலாளர்கள் கருதுகின்றனர். இத்தொலைநோக்கி இதுவரையில் 35 புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்திருக்கிறது. 20ஈ, 20எஃப் ஆகியவற்றைத் தவிர ஏனையவை அனைத்தும் பூமியை விட அதிக பருமன் கொண்டவையாகும்.


மூலம்

[தொகு]