உள்ளடக்கத்துக்குச் செல்

ரியோடிசெனிரோ மண் சரிவில் சிக்கி 200 பேர் புதைந்து மரணம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 8, 2010


பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி செனிரோவில் (Rio de Janeiro) கடந்த திங்கட்கிழமை முதல் பெய்து வரும் அடைமழையின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி சுமார் 200 பேர் வரை இறந்துள்ளதாக பாதுகாப்புப் படையைச் சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கு அதிகபட்சமாக 36 மணிநேரத்தில் 28 செமீ அளவில் மழை பெய்துள்ளது.


அங்குள்ள நித்திராய் என்னும் நகரில் தான் அநேகர் மண் சரிவில் சிக்கி மாண்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரை அரசு தரப்பில் 153 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ரியோ நகரின் வடமேற்கில் அமைந்துள்ள நித்திராயில் ஏற்பட்ட இந்த பேராபத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. அங்குள்ள மலைப்பகுதிகளில் அதிகமான அளவில் சேரி குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அளவுக்கதிகமாக குடியிருப்புகளை நிறுவியதும் மண் சரிவிற்கு ஒருவகை காரணம் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


மோரோ பம்பா சேரி பகுதிகளிலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 28 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுக்காக அரசு சார்பில் மூன்று நாள் துக்கம் அனுட்டிக்கப்படுவதாக ரியோ மாநகர ஆளுநர் செர்சியோ கார்பல் அறிவித்துள்ளார்.

மூலம்

[தொகு]