மொரோக்கோவில் விமான விபத்து, 78 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 27, 2011

மொரோக்கோவின் தெற்கு பகுதியில் இராணுவ விமானம் ஒன்று மலைப்பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 81 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.


மொரோக்கோவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற மிகப் பெரிய விமான விபத்தாகக் கருதப்படும் இச்சம்பவத்தில், மூவர் எரிகாயங்களுடன் உயிர் தப்பியிருந்தாலும், பின்னர் அவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


சி-130 ரக எர்க்கூலிசு விமானம் சர்ச்சைக்குரிய மேற்கு சகாராப் பகுதியின் வடக்கே குவெல்மிம் என்ற இடத்துக்கருகில் நேற்றுக் கால 09:00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றது. மோசமான காலநிலையே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. விமானம் இராணுவ நிலை ஒன்றில் தரையிறங்க முயற்சித்த போதே மலை ஒன்றில் மோதி தீப்பற்றியது.


60 இராணுவத்தினர், 12 பொது மக்கள், மற்றும் 9 விமானச் சிப்பந்திகள் ஆகியோர் விமானத்தில் பயணித்திருந்தனர். 42 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளைக் கொண்ட மேற்கு சகாரா பகுதி கனிம வளங்கள் அதிகமான இடமாகும். மொரோக்கோவுக்கும், அல்ஜீரியாவின் பின்னணி கொண்ட பொலிசாரியோ இயக்கத்துக்கும் இடையில் நீண்ட நாட்களாக இப்பகுதி தொடர்பாக சர்ச்சை இருந்து வருகிறது. 1976 ஆம் ஆண்டில் இருந்து மேற்கு சகாராவின் பெரும்பாலான பகுதிகள் மொரோக்கோவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.


மூலம்[தொகு]