உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானிய மாகாண ஆளுநர் மாளிகை தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 16, 2011

ஆப்கானித்தானின் பர்வான் மாகாண ஆளுநர் மாளிகைக்குள் 6 தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 29 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கே சுமார் 50 கிமீ தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மாளிகையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. பர்வான் மாநிலத்தில் தீவிரவாதிகள் பிரச்சினை குறைவாகவே இருந்து வந்துள்ளது. அப்துல் பசீர் சலாங்கி என்பவரே இங்கு ஆளுநராக உள்ளார்.


நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் தீவிரவாதிகள் ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு வாகனக் குண்டு தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதில் நுழைவு வாயில் முன்பு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்பே மாளிகைச் சுவரில் விழுந்த ஓட்டை வழியாகவே தற்கொலை தீவிரவாதிகள் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது ஆளுநர் மாளிகைக்குள் பாதுகாப்பு நிலை குறித்து உள்ளூர் ராணுவத் தளபதி, மற்றும் 2 நேட்டோ ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அவர்களின் அறைக்குள் தீவிரவாதிகள் நுழையவில்லை. தீவிரவாதிகள் குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக அதில் கலந்து கொண்ட மாகாணக் காவல்துறை அதிகாரி ஷெர் அகமது மாலதானி தெரிவித்தார்.


இந்த தாக்குதல் பற்றி கவர்னர் சலாங்கி நிருபர்களிடம் கூறுகையில், 6 தற்கொலை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் தாக்குதலின் போது, பல முறை குண்டுகள் வெடித்த சத்தமும், துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டது என்றும் குறிப்பிட்டார். மாநில தலைமை டாக்டர் முகமது ஆசிப் கூறுகையில், பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்று குறிப்பிட்டார்.


மூலம்

[தொகு]