உருசியாவின் புரோகிரஸ் விண்கலம் ஏவிய சிறிது நேரத்தில் வீழ்ந்து வெடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 26, 2011

உருசியாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் ஒன்று கடந்த புதன்கிழமை ஏவிய சில நிமிட நேரத்தில் இலக்கை அடையாமல் வீழ்ந்ததை அடுத்து தனது சோயூஸ் ஏவுகலங்களை ஏவுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் அறியப்படும் வரையில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளுவதில்லை என உருசியா தெரிவித்துள்ளது.


புரோகிரஸ் எம்-வகை விண்கலம்

இதன் மூலம் செப்டம்பர் 22 ஆம் நாள் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு கசக்ஸ்தானில் இருந்து அனுப்பப்படவிருந்த ஆறு-பேரடங்கிய பன்னாட்டு மனித விண்வெளிப் பயணம் தடைப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அக்டோபர் 28 இல் விண்வெளி நிலையத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்லும் திட்டமும் உள்ளது.


சைபீரியாவின் அல்த்தாய் குடியரசில் வீழ்ந்ததாக நம்பப்படும் புரோகிரஸ் சரக்கு விண்கலத்தின் பகுதிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


நேற்று முன்தினம் புதன்கிழமை அன்று சோயூஸ்-யூ என்ற ஏவுகலம் மூலம் அனுப்பப்பட்ட புரோகிரஸ் எம்-12எம் என்ற சரக்கு விண்கலம் சரியான சுற்றுப்பாதைக்கு வராத காரணத்தினால் பூமியில் வீழந்ததாக உருசியாவின் நடுவண் விண்வெளி ஆய்வு மையம் (ரொஸ்கொஸ்மொஸ்) அறிவித்துள்ளது.


பன்னாட்டு விண்வெளி நிலையத்தை எதிர்காலத்தில் பராமரிக்கும் திட்டம் குறித்து நாசாவுடன் கலந்தாலோசிக்கப்படும் என ரொஸ்கொஸ்மொஸ் கூறியுள்ளது.


கடந்த ஆண்டு திசம்பரில் உருசியா ஏவிய மூன்று செயற்கைக்கோள்கள் ஏவிய சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொறுங்கியது. இதனை அடுத்து ரொஸ்கொஸ்மொசின் தலைவர் அனத்தோலி பெர்ம்மீனொவ் தலமைப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார். கடந்த வாரம் ஆகத்து 18 ஆம் நாள் உருசியாவின் எக்ஸ்பிரஸ் ஏ.எம்-4 என்ற தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றை புரோட்டோன் ஏவுகலம் தவறான சுற்றுப்பாதைக்குச் செலுத்தியிருந்தது.


மூலம்[தொகு]