உள்ளடக்கத்துக்குச் செல்

சப்பானிய விண்கலம் சிறுகோளில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 16, 2010


ஹயபுசா விண்கலம் கொண்டு வந்த மண் மாதிரிகள் இட்டக்கோவா என்ற சிறுகோளில் சேகரிக்கப்பட்டதை சப்பானின் அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தினர்.


ஹயபுசா விண்கலம்

விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த டப்பாவில் காணப்பட்ட மண் மாதிரிகளை ஆராய்ந்ததில் அவை வேறு கோளைச் சேர்ந்தவை தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது சப்பானின் விண்வெளி ஆய்வுக்குக் கிடைத்த பெரும் வெற்றி எனக் கருதப்படுகிறது.


சிறுகோள் ஒன்றில் இருந்து சிறு துணிக்கைகள் பெறப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். “நிலவை அடுத்து வேறொரு வெளி உலகில் இருந்து உள்ளகப் பொருள் ஒன்று முதற்தடவையாகக் கொண்டு வரப்பட்டுள்ளது,” என சப்பானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அமைச்சர் யோசியாக்கி தக்காகி இன்று தெரிவித்தார்.


ஹயபுசா விண்கலம் 2005 ஆம் ஆண்டில் மூன்று வாரங்கள் இட்டக்கோவா என்ற சிறுகோளைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பில் இருந்து தூசுகளைச் சேகரித்தது. இதற்காக சப்பான் $200 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்தது.


மாதிரிகளைக் கொண்டுவந்த கலம் தெற்கு ஆத்திரேலியாவில் பாதுகாப்பாக கடந்த சூன் மாதத்தில் தரையிறங்கியது. ஆனாலும் ஹயபுசாவின் முதன்மைக் கலம் வளிமண்டலத்தினுள் நுழையும்போது அழிக்கப்பட்டது.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]


மூலம்

[தொகு]