இந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 26, 2010

திரினிடாட் டொபாகோ நாட்டின் முதலாவது பெண் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கம்லா பெர்சாட் பைசெசர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கம்லா தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஆளும் கட்சியின் 43 ஆண்டு கால ஆட்சி வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.


திரினிடாட் டொபாகோ

41 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. கம்லாவின் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கூட்டணி 29 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.


ஜனாதிபதி ஜோர்ஜ் மைக்சல் ரிட்சாட்ஸ் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கம்லா பிரதமராகப் பதவியேற்றார்.


2002 இலிருந்து டிரினிடாட்டின் பிரதமராக இருந்து வந்த பட்ரிக் மானிங் தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவரது ”தேசிய மக்கள் இயக்கம்” என்ற கட்சியின் ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதை அடுத்து அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரேயே கடந்த மாதம் தேர்தலை அறிவித்தார். இவரது கட்சிக்கு நாட்டில் உள்ள ஆப்பிரிக்க வம்சாவழியினரின் ஆதரவு உள்ளது.


கரிபியன் பகுதியில் மிகவும் செல்வச்செழிப்பு மிக்க நாடு திரினிடாட் டொபாகோ. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு பெருமளவு காணப்படுகிறது.


இந்திய வம்சாவழியான கம்லா 1952 இல் பிறந்தவர். தீவிர இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர். ”பெண்கள் மற்றும் பெண்களின் அமைப்புகளிடமிருந்து எனக்கு அதிகளவிலான ஆதரவு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பெண்கள் எதிர்நோக்கும் பல தடைகளை என்னால் உடைத்து முன்னேற முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றி பெண்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அதனைக் கொண்டாட இருப்பதாகவும் கம்லா கூறியுள்ளார்.


கம்லா சட்டக் கல்லூரியில் பயின்றதுடன், வர்த்தக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். அத்துடன், மேற்கு இந்தியத் தீவுப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்றவராகும். அத்துடன் அந்த நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும் சட்ட விவகார கல்வித் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.


1845 - 1917 க்கும் இடையில் கம்லாவின் மூதாதையர் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். 1 இலட்சத்து 48 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்களின் ஒருவராக கம்லாவின் மூதாதையர் அங்கு சென்றிருந்தனர். கரும்பு, கொக்கோ பயிர்ச் செய்கையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 13 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ட்ரினிடாட், டுபாக்கோவில் புலம்பெயர்ந்த இந்திய சமூகம் 44 சதவீதமாகும்.

மூலம்[தொகு]