உள்ளடக்கத்துக்குச் செல்

சூறாவளி யாசி ஆத்திரேலியாவை அண்மித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேறினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 1, 2011

ஆத்திரேலியாவின் கரையோரப் பகுதிகளை சூறாவளி யாசி தாக்கும் அபாயம் கிளம்பியுள்ளதால் வடக்கு குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சுற்றுலாப் பகுதியான கேர்ன்ஸ் நகரில் உள்ள பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டு நோயாளிகள் பிறிஸ்பேன் நகருக்கு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.


சனவரி 31 இல் யாசி சூறாவளி
ஆத்திரேலியாவில் கேர்ன்ஸ் நகரம்

கரையோரப் பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி யாசி நான்காம் தரத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று கேர்ன்ஸ் நகரைத் தாக்கும் எனவும், இது அங்கு பலத்த மழையையும் புயலையும் கொண்டு வரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இந்த சூறாவளி குறித்து குயின்ஸ்லாந்து முதல்வர் அன்னா பிளை கருத்துத் தெரிவிக்கையில், "இது மிகப் பெரியதும் உயிராபத்தை விளைவிக்கக்கூடியதும்," எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


இந்த சூறாவளி கேர்ன்ஸ் பகுதியைத் தாக்கினாலும், பல நூறு கிலோமீட்டர்களுக்கு இதன் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கேர்ன்ஸ் நகரில் அவசியமானால் கட்டாய வெளியேற்றம் அமுல் படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


2006 மார்ச் மாதத்தில் குயின்சுலாந்தைத் தாக்கி பலத்த சேதத்தை உண்டு பண்ணிய லாரி என்ற சூறாவளியை விட யாசியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


வெப்பவலய சூறாவளியான யாசி பிஜிக்கு அருகே சனவரி 26 ஆம் நாள் ஆரம்பமாகி நேற்று சனவரி 31 ஆம் நாள் மாலை 5 மணிக்கு மூன்றாம் தர சூறாவளியாக மாறியது.


மூலம்

[தொகு]