முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் முர்சி எகிப்தின் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 22 செப்டெம்பர் 2016: எகிப்து கடற்கரையில் புலம் பெயர்வோர் படகு கவிழ்ந்ததில் 100இக்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
- 29 மார்ச்சு 2016: எகிப்துஏர் வானூர்தி கடத்தல் முடிவுக்கு வந்தது
- 31 அக்டோபர் 2015: உருசிய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது
- 21 மே 2014: எகிப்தின் முன்னாள் தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
- 19 சனவரி 2014: புதிய அரசியலமைப்புக்கு எகிப்து மக்கள் ஒப்புதல் அளித்தனர்
திங்கள், சூன் 25, 2012
எகிப்தில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகம்மது முர்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். எகிப்தின் மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்ட முதலாவது அரசுத்தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
முர்சி 51.73% வாக்குகளைப் பெற்று முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக்கை வென்றார். முர்சி தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, முழு நாட்டுக்கும் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் எனவும், தாம் முழு எகிப்தியர்களுக்கும் தலைவனாக இருப்பேன் எனவும் கூறினார்.
முர்சியின் வெற்றியை மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகரின் மத்தியில் உள்ள தாகிர் சதுக்கத்தில் கூடினர். அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்ட முர்சி இங்கு தனது முதலாவது உரையை நிகழ்த்தவிருந்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் சூழ்ந்து கொண்டனர். எகிப்தின் தற்போதைய இராணுவ ஆட்சியாளர் உசைன் தண்டாவி தேர்தலில் வெற்றி பெற்ற முர்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இசுரேல் உட்பட உலக நாடுகள் பலவும் முர்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே நடைமுறையில் உள்ள நீண்ட கால அமைதி உடன்பாட்டில் மாற்றம் ஏதும் இராது எனத் தாம் நம்புவதாக இசுரேல் பிரதமர் பெஞ்சமின் தெத்தனியாகு தெரிவித்தார்.
2011 எகிப்தியப் புரட்சியை அடுத்து அதிபர் ஒசுனி முபாரக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இரண்டாம் கட்டத் தேர்தல்கள் முடிவடைந்தவுடன் இடைக்கால அரசியலமைப்பை இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்தனர். இதன்படி நிரந்தர அரசியலமைப்பு ஒன்றை யாப்பதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை தேசியப் பாதுகாப்புப் பேரவை அமைக்கப்பட்டு எகிப்தின் தேசியப் பாதுகாப்புக்கு இராணுவத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் சூன் 30 ஆம் நாள் முர்சியிடன் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு இராணுவம் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும் தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்புக்குள் மட்டுமே அவரது அதிகார வரம்புகள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- Muslim Brotherhood's Mursi declared Egypt president, பிபிசி, சூன் 24, 2012
- Egypt's president-elect Mursi begins forming government, பிபிசி, சூன் 25, 2-12
- Egypt's Morsi calls for unity after poll win, அல்ஜசீரா, சூன் 25, 2012